நவுருவுக்கு நாடு கடத்தப்படவிருந்த புகலிடக் கோரிக்கையாளரை சட்ட சவால் காரணமாக அகற்றுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் ரொனி பேர்க், அந்த நபரை நாடு கடத்த அரசாங்கத்திற்கு அதிகாரம் இருப்பதாகவும், ‘முடிந்தவரை விரைவில் நாடுகடத்தப்படுவார்’ என்றும் கூறுகிறார்.
நாடுகடத்தலை எதிர்கொள்ளும் நபர் NZYQ குழுவைச் சேர்ந்தவர். தற்போது சுமார் 280 பேர், முன்னர் காலவரையற்ற குடியேற்றத் தடுப்புக்காவலை எதிர்கொண்டனர். ஏனெனில் அவர்களின் விசாக்கள் “நற்பண்பு அடிப்படையில்” ரத்து செய்யப்பட்டிருந்தன. ஆனால் அவர்கள் துன்புறுத்தலை எதிர்கொண்டதாலோ அல்லது அந்த நாடுகள் அவர்களை ஏற்க மறுத்ததாலோ அவர்களை தங்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்ப முடியவில்லை.
நவம்பர் 2023 இல், “நியாயமான முறையில் எதிர்பார்க்கக்கூடிய எதிர்காலத்தில்” ஒரு நபர் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான “உண்மையான வாய்ப்பு” இல்லையென்றால், அவரை காலவரையின்றி தடுத்து வைப்பது அரசாங்கத்திற்கு சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அவுஸ்திரேலியாவுடன் கையெழுத்திட்ட ரகசிய ஒப்பந்தத்தின் கீழ், நவுரு அந்த நாட்டிற்கு 30 ஆண்டு விசா வழங்கியதை அடுத்து, அந்த நபரும், மேலும் இரண்டு பேரும் கடந்த வாரம் அவுஸ்திரேலியாவில் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டனர். நாடுகடத்தப்படவுள்ள மூன்று பேரும் “வன்முறை குற்றவாளிகள்” என்றும், ஒருவர் கொலைக் குற்றவாளி என்றும் அமைச்சர் கூறுகின்றார்.
அவுஸ்திரேலிய அரசாங்கம், அவுஸ்திரேலியாவிலிருந்து குடிமக்கள் அல்லாதவர்களை மீள்குடியேற்றத்திற்காக ஏற்றுக்கொள்வதற்கு நவுருவுக்கு எவ்வளவு பணம் செலுத்துகிறது – அல்லது பசிபிக் தீவு நாட்டிற்கு வேறு என்ன சலுகைகள் வழங்கப்பட்டன என்பதை கூற மறுக்கிறது.
வெள்ளிக்கிழமை, மீண்டும் காவலில் வைக்கப்பட்டவர்களில் ஒருவர், தனது பாதுகாப்பு விசாவை நற்பண்பு அடிப்படையில் ரத்து செய்த முடிவு சட்டவிரோதமானது என்று வாதிட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு தாக்கல் செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குள், குடியேற்றம் மற்றும் பன்முக கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர், வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது அவர் நாடுகடத்தப்படமாட்டார் என்று நீதிமன்றத்திற்கு உறுதியளித்தார்.
மற்ற இரண்டு ஆண்களும் திங்கட்கிழமை நாடு கடத்தப்படவுள்ளனர்: அந்த வழக்குகளிலும் கடைசி நிமிட சட்ட சவால்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.
முதலாவது நபரை பிரதிநிதித்துவப்படுத்தும் மனித உரிமைகள் சட்ட மையத்தின் இணை சட்ட இயக்குநர் லாரா ஜான், விசா மறுஆய்வு செயல்முறையை முடிப்பதற்கு முன்பே அவுஸ்திரேலியாவிலிருந்து அவர்களை வெளியேற்ற அரசாங்கம் முயற்சிப்பது “வருந்தத்தக்கது” என்கிறார்.
“எங்கள் பயனாளருக்கு தற்காலிகமாக ஒரு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், மூன்றாவது நாட்டிற்கு நாடுகடத்தப்படும் அச்சுறுத்தல் இன்னும் மறைந்துவிடவில்லை. இந்தப் புதிய அதிகாரங்களை தொடர்ந்து பயன்படுத்த அனுமதித்தால், அவர்களின் குடும்ப தொடர்புகள் அல்லது அவர்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் அவுஸ்திரேலியாவில் கழித்திருக்கிறார்களா என்பதைப் பொருட்படுத்தாமல், அவுஸ்திரேலிய அரசாங்கம் விசா இல்லாமல் உலகின் எந்த நாட்டிற்கும் எந்தவொரு நபரையும் வெளியேற்ற முடியும்.”
“எதிர்காலத்தில், நமது சமூகத்தில் ஆயிரக்கணக்கான மக்களைப் பாதிக்கக்கூடிய, நமது அரசாங்கத்தின் இந்த தண்டனை மீறலை நாம் தொடர்ந்து எதிர்க்க வேண்டும்.” என்றும் அவர் கூறுகின்றார்.

